This Article is From Sep 03, 2019

“திமுக திமிங்கலம்… அதிமுக விலாங்கு மீன்…”- அமைச்சர் ஜெயக்குமார் பன்ச்!

"அதிமுக என்பது வேறு. திமுக என்பது வேறு. அதிமுக-வுக்கு என்று தனி கொள்கை, கோட்பாடு இருக்கிறது"

“திமுக திமிங்கலம்… அதிமுக விலாங்கு மீன்…”- அமைச்சர் ஜெயக்குமார் பன்ச்!

"திமுக என்கிற திமிங்கலம், எப்போதும் வாயைப் பிளந்து, அதிமுக-வினர் சிக்குவார்களா என்று பார்த்துக் கொண்டே இருக்கிறது"

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன், இன்று திமுக-வில் இணைந்தார். பரணி கார்த்திகேயன், அதிமுக எம்.எல்.ஏ-வான ரத்தினசபாபதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகேயன், அமமுக-வில் அதிருப்தி ஏற்பட்டு அதிமுக-வுக்கு அணி மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக-வில் ஐக்கியமாகியுள்ளார். 

இந்த செய்தி வந்ததைத் தொடர்ந்து பேசிய தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “திமுக திமிங்கலம் என்றால், அந்த திமிங்கலத்துக்கே விளையாட்டுக் காட்டும் விலாங்கு மீன் அதிமுக. இந்தக் கட்சியின் உண்மைத் தொண்டன் யாரும் திமுக-வின் பக்கம் போகமாட்டான்” என்று ஆவேசப்பட்டார். 

அவர் தொடர்ந்து, “அதிமுக என்பது வேறு. திமுக என்பது வேறு. அதிமுக-வுக்கு என்று தனி கொள்கை, கோட்பாடு இருக்கிறது. அந்த கோட்பாட்டை வழிவகுத்துத் தந்தவர்கள்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் புரட்சித் தலைவி ஜெயலலிதாவும். 

திமுக என்கிற திமிங்கலம், எப்போதும் வாயைப் பிளந்து, அதிமுக-வினர் சிக்குவார்களா என்று பார்த்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், அதிமுக என்பது விலாங்கு மீன். திமிங்கலத்துக்கே விளையாட்டுக் காட்டும் விலாங்கு மீன். அதிமுக-வின் உண்மைத் தொண்டன், ஒரு நாளும் திமுக-வின் பக்கம் சாயமாட்டான்” என்று உறுதிபட தெரிவித்தார். 

இதற்கு முன்னர் அமமுக-வில் முக்கிய பொறுப்புகளில் இருந்த செந்தில் பாலாஜி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர், அக்கட்சியிலிருந்து விலகி திமுக-வில் சேர்ந்தனர். செந்தில் பாலாஜியும் தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுக-வில் இருந்தபோதே, செல்வாக்குமிக்கவர்களாக வலம் வந்தனர். அமமுக-விலிருந்து அவர்கள் விலகினால், அதிமுக முகாம் நோக்கித்தான் வருவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் திமுக-வுக்குத் தாவினார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் ஜெயக்குமார், அதிமுக-வினரை ‘விலாங்கு மீன்கள்' என்றுள்ளார். 

.