கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், சில்லறை விற்பனையிலும் ஆவின் பாலின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, அடிக்கடி ‘அதிரடி' கருத்துகளை சொல்லி முக்கிய செய்தியில் இடம்பிடிப்பார். ‘கோட்சேதான் இந்தியாவின் முதல் தீவிரவாதி. ஒரு இந்துதான் இந்தியாவின் முதல் தீவிரவாதி' என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு, ‘அவரது நாக்கை அறுக்க வேண்டும்' என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். தற்போது ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து, ‘மக்கள் தாங்கிக் கொள்ளும் அளவுக்குத்தான் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இருக்காது' என்றுள்ளார். ஆவின் பால் விலை, லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படிபட்ட சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பரபர கருத்து தெரிவித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி. “இந்தியா, வல்லரசாக உருபெறப்போவது உறுதி. அந்த வல்லரசு நாட்டின் முக்கிய அங்கமாக தமிழகம் இருக்கும். அந்த தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். அதன் பிரதமராக நரேந்திர மோடி இருப்பார். இதுதான் காலத்தின் கட்டாயம். காலச் சக்கரத்தின் சுழற்சி” என்றார். அவர் மேலும், “காங்கிரஸ் கட்சிக்கு இனி வாழ்வே கிடையாது. அந்தக் கட்சி வாழாவெட்டியாக மாறிவிட்டது” என்றுள்ளார்.
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், அதன் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு இரண்டு நாட்களுக்கு முன்னர் அமலுக்கு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 1 லிட்டர் பசும்பால் 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 32 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் 4 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலை 6 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், சில்லறை விற்பனையிலும் ஆவின் பாலின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பால் வகைகளும் அட்டைதாரர்களுக்கும், அதிகபட்ச விற்பனைக்கும் அரை லிட்டருக்கு 3 ரூபாயும், ஒரு லிட்டருக்கு 6 ரூபாயும் விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.