Bigil Special Shows cancellation- தற்போது தமிழக அரசின் அறிவிப்பால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
Bigil Special Shows cancellation- தீபாவளிப் (Deepavali) பண்டிகையையொட்டி, 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது, விஜய் (Vijay) நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்' (Bigil). பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி வரும் வெள்ளியன்று, பிகில் வெளியாவது உறுதியாகியுள்ளது. பொதுவாக விஜய் படத்திற்கு, அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் (Bigil Special Shows) போடப்படும். தற்போது அந்தக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களைக் கோபப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிகில் சிறப்புக் காட்சிகள் ரத்து குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிகில் சிறப்புக் காட்சிகள் ரத்து குறித்து, விளக்கம் கொடுத்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர், கடம்பூர் ராஜு, ‘பிகில் திரைப்படத்திற்கு மட்டுமல்ல தீபாவளிக்கு வெளியாகும் எந்த திரைப்படத்திற்கும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஊடகங்கள் பிகிலை மட்டும் முன்னிலைப்படுத்துகின்றன.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. ஆகவேதான் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை,' என்று தெரிவித்தார்.
பிகில் படத்திற்காக, அதிகாலை 2 மணி, 4 மணி என, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நேரங்களில் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகளை திரையரங்குள் ஏற்பாடு செய்திருந்தன. ரசிகர்களும் இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்திருந்தனர். தற்போது தமிழக அரசின் அறிவிப்பால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், “தீபாவளி அன்று, திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு, ஒரு டிக்கெட்டுக்கு 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அதை சாமானியர்கள் கொடுத்துப் பார்க்க முடியுமா..?
இது குறித்து எங்களுக்குப் புகார் வந்ததைத் தொடர்ந்துதான் தீபாவளிக்கு வெளியாகும் எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சிகள் கிடையாது என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். பிகிலாக இருந்தாலும் சரி. திகிலாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் ஒரே விதிதான்,” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.