தான் கூறிய சர்ச்சை கருத்துக்கு பின்னர் விளக்கம் அளித்தார் செல்லூர் ராஜு
Madurai: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து வரும் செல்லூர் ராஜு தனது கருத்துக்களால் அடிக்கடி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். இப்போது, அவரது மேடைப்பேச்சு ஒன்று சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒன்றில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியபோது, “ஒரு காலம் வரும். அன்றைக்கு உங்களில் ஒரு பெண் கட்சியை வழி நடத்திச் செல்வார். கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.” என்று கூறினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். ஜெயலலிதாவுக்கு பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவை குறிப்பிட்டுதான், செல்லூர் ராஜு பெண் ஒருவர் கட்சியை வழி நடத்துவார் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது.
தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், அதிமுகவில் ஏராளமான பெண்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகத்தான் உங்களில் ஒருவர் கட்சியை வழி நடத்துவார் என்று கூறினேன். பத்திரிகையாளர்களின் சந்தேக கேள்விகளுக்கெல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது என்றார்.
காவிரி ஆறு ஆவியாகிச் செல்வதை தடுக்க கடந்த ஆண்டு தெர்மாக்கோல் அட்டைகளை அமைச்சர் செல்லூர் ராஜு ஆற்றில் மிதக்க விட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பேசப்பட்டது.