தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீது ஐடி ரெய்டு நடந்ததை அடுத்து, அவரது தந்தை சின்னத்தம்பி, தவறுகள் குறித்து ஒப்புக் கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்தன. இந்நிலையில், தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி கடிதம் எழுதியுள்ளார் சின்னத்தம்பி.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையை நடத்தினர். சத்துணவுத் திட்டத்துக்காக நியமிக்கப்படும் பதவிகளுக்கு லஞ்சம் பெற்று நியமனம் வழங்கியதாக விஜயபாஸ்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும், அவருக்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடந்த போது, இதற்காக வாங்கப்பட்ட லஞ்சப் பணம் பிடிபட்டதாகவும் தகவல் கசிந்தது.
இந்த விவகாரத்தில் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் வருமான வரித் துறையினரால் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணையின் போது தான், சின்னத்தம்பி, தன் மகன் வாங்கிய லஞ்சம் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார் என்று ஊடகங்களில் தகவல் கசிந்தது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் சின்னத்தம்பி, ‘ஐடி ரெய்டு நடந்தபோது எந்தவித பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன். நானும் என் குடும்ப்பத்தினரும் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தோம். எப்போதெல்லாம் எங்களை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார்களோ அப்போதெல்லாம் நாங்கள் தேவையான ஆவணங்களுடன் சென்று அதிகாரிகளைப் பார்த்தோம். ஆனாலும், என் மீதும் என் குடும்பத்தின் மீதும் தவறான தகவல்கள் சொல்லி வருவது எனக்கு மன வருத்தம் அளித்துள்ளது. நானோ என் குடும்ப உறுப்பினரோ எந்த வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் வருமான வரித் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த போதும் எங்கள் அரசியல் எதிரிகள் எங்களுக்கு எதிராக தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
குட்கா ஊழல் குறித்தான வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சிபிஐ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)