This Article is From Nov 01, 2018

தமிழ்நாட்டில் “மெடிக்கல் எமர்ஜென்ஸி”யை அறிவித்து டெங்குவை தடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தூங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசு விழித்துக்கொண்டு இனி ஒரு டெங்கு மரணம் கூட நிகழ்ந்து விடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tamil Nadu Posted by

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்குவை தடுக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

ஒவ்வொரு ஆண்டும் டெங்குக் காய்ச்சல் வந்தாலும், கடந்த ஆண்டு மட்டும் 158-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் பிறகும், இந்த ஆண்டு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், தங்கள் அரசை எப்படியாவது காப்பாற்றிக் கொள்வதிலும், கமிஷன் - கலெக்‌ஷனில் காலத்தைச் செலவிடுவதிலும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவுமே முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே நாளில் தமிழகம் முழுவதும் மூன்று பேர் மரணம், ஐந்து பேர் மரணம் என்றெல்லாம் வரும் அதிர்ச்சிச் செய்திகள் மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.

Advertisement

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இல்லை, அங்கு மருந்துகளும் இல்லை என்றும் வரும் செய்திகள் கவலையளிக்கிறது.

பெயரளவிற்கு சில மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதாக “விளம்பரம்” செய்துகொள்ளும் இந்த அரசு, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிடக்கும் குப்பைகளைக் கூட இன்னும் முழுமையாக அள்ளவில்லை. தெருக்களில் எங்கு பார்த்தாலும் கிடக்கும் குப்பைகளும், மழைத் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் காட்சிகளும் அ.தி.மு.க ஆட்சியின் அவலத்திற்குக் கண்கூடான சாட்சிகளாகின்றன.

Advertisement

பிஞ்சுக் குழந்தைகளின் மரணங்களைக் கண்டு கூட இந்த அ.தி.மு.க அரசு மனம் இரங்கவில்லை. மக்களின் உயிர்ப்பாதுகாப்பு விஷயத்திலும் அ.தி.மு.க அரசு எப்போதும்போல் தூங்கிக் கொண்டிருக்காமல் உடனடியாகத் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு உருப்படியாகப் பணிசெய்ய முன்வர வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

மாநிலத்தில் “மெடிக்கல் எமெர்ஜென்ஸி” அறிவித்து, இனி ஒரு டெங்கு மரணம் கூட நிகழ்ந்து விடாத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கிட அ.தி.மு.க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும், வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி உயிர்பறிக்கும் டெங்குக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வினை மக்களுக்கு முழு அளவில் ஏற்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement