This Article is From Mar 13, 2020

வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம்: ராமதாஸ் வரவேற்பு

பெயர்ப்பலகைகளைத் தமிழில் எழுத வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது ஆகும். ஆனால், இந்த அறிவிப்பைச் செயல்பாட்டிலும் காட்ட வேண்டும்.

Advertisement
தமிழ்நாடு Edited by

தமிழகத்தின் தமிழ்த் தெருக்களில் நிச்சயம் தமிழ் மணக்கும் -ராமதாஸ்

Highlights

  • தமிழில் பெயர்பலகைகள் பாமகவுக்கு கிடைத்த வெற்றி
  • அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும்
  • இந்த அறிவிப்பை செயல்பாட்டிலும் காட்ட வேண்டும்.

கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, பாமகவுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டப்படி, தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகையில் உள்ள பெயர்கள், முதன்மையாகப் பெரிய அளவில் தமிழில் இருக்க வேண்டும். அதன்கீழ் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் இடம் பெற வேண்டும்.

ஆனால் சில வணிக நிறுவனங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் உள்ளது.  இதுபற்றி தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.  இதேபோன்று அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டு உள்ள உத்தரவில், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகை தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற மொழிகள் 3வது இடத்திலும் இருக்க வேண்டும்.  இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று கூறியதாவது, "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டியது கட்டாயம் என்ற அரசாணை தீவிரமாகச் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பாமகவின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Advertisement

தமிழில் பெயர்ப்பலகை எழுதாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 அபராதம் என்ற பழைய அணுகுமுறை நீடித்தால், அனைத்து பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மணக்கும் என்பது கனவாகவே இருக்கும்.

இத்தகைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டு கடுமையாக அபராதங்கள் விதிக்கப்பட்டால் தான் பெயர்ப்பலகைகளைத் தமிழ் மொழிக்கு மாற்றும் அரசின் நோக்கம் நிறைவேறும்.

Advertisement

அதுமட்டுமின்றி, கடைகளின் பெயர்களில் உள்ள ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழில் எழுதுவது கூடாது என்று எம்ஜிஆர் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலத்தில் 'ஹோட்டல்' என்று இருந்தால், அதைத் தமிழில் 'ஓட்டல்' என்று எழுதும் வழக்கம் உள்ளது. அதைத் தவிர்த்து 'உணவகம்' என்று தனித்தமிழில் எழுதப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பாமகவின் கோரிக்கையை ஏற்று, பெயர்ப்பலகைகளைத் தமிழில் எழுத வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது ஆகும். ஆனால், இந்த அறிவிப்பைச் செயல்பாட்டிலும் காட்ட வேண்டும். அவ்வாறு செய்யும்போது தமிழகத்தின் தமிழ்த் தெருக்களில் நிச்சயம் தமிழ் மணக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement