TN Rain News: “தமிழகத்தில் மழை தொடரும்!” - வானிலை மையம் தகவல்
TN Rain News: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் முடிவடைந்த நிலையிலும், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தின் பரளியூரில் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தின் தாமரைப்பாக்கத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் நிலை குறித்து, பிரபல வானிலை வல்லுநரான தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான் கூறுகையில், “நகரத்திற்கு ஜனவரியில் எதிர்பார்த்ததைவிட அதிக மழை பொழிவே கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு இந்த மழை தொடரும். ஜனவரியின் கடைசி வாரத்திலும் மழையை எதிர்பார்க்கலாம்,” என்றார்.
இந்த முறை வடகிழக்குப் பருவமழை மூலம் நல்ல மழை பொழிவு கிடைத்துள்ளது என்றும் இதனால் தமிழக அளவில் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை பெரிதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.