புயல் அறிவிப்பைத் தொடர்ந்து கடற்படை உஷார் நிலையில் உள்ளது. (கோப்புப் படம்)
New Delhi: அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும், அது சீக்கிரமே புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி கேரளா மற்றும் லக்ஷதீபம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுநிலை, தீவிர புயல் சின்னமாக மாறிய பின்னர், அது ஓமன் மற்றும் யெமனைக் கடக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
புயல் சின்னம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கடற்படை ‘கொச்சி மற்றும் லக்ஷதீபத்தில், புயலால் ஏற்பட உள்ள பாதிப்புகளை சமாளிக்க உயர் மட்டக் குழு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளது.
புயல் காரணமாக, அடுத்த 12 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறத்தப்பட்டுள்ளது. அதேபோல கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றவர்களையும் கரைக்குத் திரும்பி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘தென் கிழக்கு வங்கக் கடலுக்கு அருகில் இன்னொரு காற்றுழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாக வாய்ப்புள்ளது. மேலும் வலு பெற்ற காற்றழுத்தத் தாழ்வு நிலை, அடுத்த 72 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளது’ என்று வானிலை ஆய்வு மையம் கூடுதல் தகவல் தெரிவித்துள்ளது.