This Article is From Dec 13, 2018

‘கனமழை இருக்கு மக்களே..?’- முழு தகவல் உள்ளே

இது புயலாக வலுப்பெற்று, தற்போதைய நிலவரப்படி, நாளை புயலாக மாறி, தெற்கு ஆந்திரா - வடக்குத் தமிழகம் நோக்கி நகரக்கூடும்

‘கனமழை இருக்கு மக்களே..?’- முழு தகவல் உள்ளே

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், ‘நேற்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது சென்னைக்கு தென் கிழக்கில், 1,170 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

மேலும் இது இன்று இரவுக்குள், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். நாளை இது புயலாக வலுப்பெற்று, தற்போதைய நிலவரப்படி, நாளை புயலாக மாறி, தெற்கு ஆந்திரா - வடக்குத் தமிழகம் நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தின் கடலோர மாவட்டத்தில், 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். மேலும், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்கள், டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறியுள்ளார்.

.