நாளை முதல் டிஆர்பி தேர்வு தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, இந்த தேர்வை எழுத மொத்தம் 1.85 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த செப்.17-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து போட்டித்தேர்வு நாளை தொடங்கி 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முதல்முறையாக கணினி வழியாக நடைபெற உள்ளது. அதுவும் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக இந்த தேர்வு நடைபெற உள்ளது. நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியல் பாடங்களுக்கான தேர்வு எழுத உள்ளவர்கள் இந்த இரண்டு பாடங்களுக்கான கால அட்டவணை திருத்தப்பட்டது என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் தேர்வு தேதி மற்றும் தேர்வு மையத்தையும் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும்.
(TNTRB) ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுவரை ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக தங்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து உங்களின் தேர்வு விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். மேலும், தகுதியற்றவர்கள் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களின் பட்டியலையும் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு முதல்முறையாக கணினி வழியாக நடைபெற உள்ளதால், தேர்வு எழுதுபவர்கள் முன்அனுபவம் பெறுவதற்காக டிஆர்பி இணையதளத்தில் பயிற்சித் தேர்வுகள் எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கணினி அடிப்படையிலான இந்த தேர்வில் 150 கேள்விகளுடன், 3 மணிநேர கால இடைவெளியில் ஒரு தாள் இருக்கும். ஒவ்வொரு கேள்வியும் ஒரு மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் மூன்று பிரிவுகளாக கேள்விகள் இருக்கும்; முதன்மை பாடத்தின் கேள்விகள் 110 மதிப்பெண்களுக்கும், கல்வி முறை குறித்த கேள்விகள் 30 மதிப்பெண்களுக்கும், பொது அறிவு குறித்த கேள்விகள் 10 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.
தேர்வு முடிவுகளை தேர்வு வாரியம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும். சிபிடியில் தகுதி பெற்றவர்கள் அடுத்ததாக, சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள்.
Click here for more Jobs News