தூத்துக்குடியில் மத்திய அரசு சார்பில் சமீபத்தில் நிலத்தடி நீர் பரிசோதனை நடத்தப்பட்டு அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி, மத்திய நீர் வளத் துறை அமைச்சகத்திடமிருந்து தமிழக அரசுக்கு ‘தூத்துக்குடி சிப்காட் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் செய்த நிலத்தடி நீர் ஆய்வறிக்கை’ என்ற ஆவணம் வந்தது. 30 இடங்களில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், நீர் மாதிரியை எடுக்க ஆலைக்குள் மத்திய அரசின் அதிகாரிகள் யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உள்நோக்கம் கொண்ட அறிக்கையை வைத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதவாறு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிமன்றம், மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் மற்றும் நிலத்தடி நீர் வாரியம் ஆகியவற்றுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் அறிக்கைக்கு எதிராக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சமீபத்தில் மத்திய நீர் வளத் துறை அமைச்சக செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழக அரசிடம் எந்த வித தகவலும் கூறாமலேயே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)