This Article is From Jun 21, 2019

''காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்''- அதிமுக

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை அதிகரித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

''காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்''- அதிமுக

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள். தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையை எழுப்பி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு தனது முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தியுள்ளது. 

மழையின்மை, கோடை வெயில் உள்ளிட்டவை காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், பற்றாக்குறையை சரி செய்ய முடியவில்லை.

தட்டுப்பாட்டால் தலைநகர் சென்னை அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் குறிப்பிட்ட சில இடங்களில் இல்லாததால் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மால்கள், ஐ.டி.நிறுவனங்களும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக தண்ணீர் பிரச்னை இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது. 

தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னையை எழுப்பி மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் பேசினார். அப்போது, 'தமிழகத்திற்கு நீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக காவிரி உள்ளது. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை நீங்க வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்' என்றார். 

காவிரி ஒழுங்குமுறையாற்றுக் குழுவின் முடிவின்படி, தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

.