கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தண்ணிர் பிரச்னை நிலவி வருகிறது.
Chennai: தண்ணீர் பிரச்னை காரணமாக தமிழகத்தில் பள்ளிகளை மூடக்கூடாது என்றும், மாற்று ஏற்பாடுகளை செய்து பள்ளிகளை நடத்த வேண்டும் என்றும் நிர்வாகத்திற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் சில பள்ளிகள் மூடப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழக அரசிடம் இருந்து உத்தரவு வெளியாகி இருக்கிறது. மாணவர்களுக்கான அடிப்படை தேவைகளை பள்ளி நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதேபோன்று, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையால்தான் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக கூறி திமுக சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு சென்னை முன்னாள் மேயர் மா. சுப்ரமணியன் அளித்த பேட்டியில், ''தண்ணீர் பிரச்னை பூதாகரமாகியுள்ள நிலையில், இதனை சரிசெய்ய இத்தனை நாட்களாக தமிழக அரசு என்ன செய்தது?. சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். இதனை முன்னரே செய்திருக்கலாமே'' என்று தெரிவித்தார்.
சென்னைக்கு வேலூரில் இருந்து ரூ. 65 கோடி மதிப்பீட்டில் தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.