This Article is From Jun 14, 2019

சென்னையில் மழைக்கு வாய்ப்பு? என்ன சொல்கிறது வானிலை மையம்

சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சென்னைவாசிகளுக்கு ஆறுதலாக, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு? என்ன சொல்கிறது வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் இதர மாவட்டங்களில் வறட்சியே நீடிக்கிறது.

இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள், மழையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இதில், சென்னை கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டதால், மழையை நம்பியே சென்னை மக்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் ஆறுதலான வார்த்தையை வெகுநாட்களுக்கு பிறகு கூறி இருக்கிறது. அதேசமயம் இன்று அனல் காற்று வீசும் என்றும், 15ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் வெப்பத்தின் அளவு குறையும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் 15-ந்தேதிக்கு (நாளை) பிறகு வெயிலின் தாக்கம் குறையும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை தான் நிலவும்.

திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூரில் நாளை (இன்று) அனல் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை, வெப்பச்சலனம் காரணமாக 15-ந்தேதி (நாளை) மற்றும் 16-ந்தேதி (நாளை மறுதினம்) ஆகிய 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தென்மேற்கு பருவ மழையின் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

.