தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கடலோர பகுதிகளில் கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்திருக்கிறது.
அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 13 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. அடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தளவில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தளவில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளளார்.