நீர் மேலாண்மையை தீவிரப்படுத்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் தீவிர பிரச்சார இயக்கம் நடத்தப்படும்.
தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையை போக்க, நீர் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் காரணமாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டத் தொடரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து, ஜூலை 30-ம் தேதி வரை என 23 நாட்களுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து துறை வாரிய மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அந்த வகையில், இன்றைய கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையை போக்க, நீர் மேலாண்மை இயக்கம், மக்கள் இயக்கமாக தொடங்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆறுகள், முகத்துவார கழிமுகங்கள், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழுவை ஏற்படுத்தி செயல்படுத்தப்படும்.
நீர் மேலாண்மையை தீவிரப்படுத்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் தீவிர பிரச்சார இயக்கம் நடத்தப்படும். அமைச்சர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு மக்கள் இயக்கமாக நடத்தப்படும்.
மழை நீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். கோதாவரி - காவிரியை இணைக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். கழிவுநீரை மறுசுழற்சி செய்து, நன்னீர் தேவை பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை. காவிரியை தூய்மைபடுத்தும் பணிகள் துவங்கப்படும். வருங்காலத்தில் நீர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், 10 நாட்களுக்கு முன்னதாகவே, சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவடைய உள்ளது.