Noida (UP): நொய்டாவின் செக்டர் 91-ல் இருக்கும் மரங்களை வெட்டப்படுவதில் இருந்து காப்பாற்ற அங்கிருக்கும் உள்ளூர் மக்கள், மரங்களுக்கு ராக்கி கட்டி போராடியுள்ளனர். செக்டர் 91, கிரீன் பெல்ட் என்று அழைக்கப்படும் பகுதி. தற்போது அங்கிருக்கும் மரங்களை வெட்டிவிட்டு, பல்லுயிர் பூங்கா ஒன்றை அமைக்க அரசு முயன்று வருகிறது. இதற்கு எதிராகத்தான் இப்படிப்பட்ட வித்தியாசமான போராட்டத்தில் மக்கள் இறங்கியுள்ளனர்.
பல்லுயிர் பூங்கா அமைக்க 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது அரசு. இதற்கு முதற்கட்டமாக 3,000 மரங்களை வெட்டிச் சாய்துள்ளது. இதில் தைல மரம், வேம்பு மற்றும் பபூல் மரங்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் வேம்பு மற்றும் பபூல் மரங்களை வெட்டக் கூடாது என்று சட்டம் இருக்கிறது.
கடந்த 3 முதல் 4 மாதங்களாக இந்த மரம் வெட்டும் வேலை நடந்து வருகவதாக தெரிகிறது. இப்படி அரசு செய்வதற்கு பின்னால் இருக்கும் காரணமாக சொல்லப்படுவது, வரும் 2031 ஆம் ஆண்டுக்கு முன்னர் 75 ஏக்கர் அளவிலான பல்லுயிர் பூங்கா வந்துவிடும் என்று காண்பிக்கத்தான் என்று கூறப்படுகிறது.
இதற்கு ஆரம்பம் முதலே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் போராட்டத்தின் ஒரு கட்டமாகத்தான், இன்று மரங்களுக்கு ராக்கி கட்டுவதும் அதைக் கட்டிப்பிடிப்பதும் அரங்கேற்றப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து அங்கு வசித்து வரும் மது சௌத்ரி என்பவர், ‘இந்த மரங்கள்தான் எங்களின் நுரையீரலை பாதுகாத்து வருகிறது. ஒரு பல்லுயிர் பூங்காவை அமைக்க எதற்கு இவ்வளவு மரங்களை வெட்டுகின்றனர். இதை ஒரு பல்லுயிர் வனமாக ஆக்கலாமே?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.