முதலாளியின் வருமானத்தை காக்க, மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம்: கமல்ஹாசன்
முதலாளியின் வருமானத்தை காக்க, மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தை துவங்கினர். 99 நாட்களாக போராட்டம் அமைதியாக நடந்த நிலையில், 100வது நாள் போராட்டமாக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானித்தனர் போராட்டக்குழுவினர்.
அதன்படி, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இந்த துப்பாக்கிசூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர். 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நப்ர விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். தொடர்ந்து, இந்த நிகழ்வு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் விசாரணை நடந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, 'மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது', என்று தெரிவித்துள்ளார்.