ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் நிலை என்ன? ஸ்டாலின் கேள்வி
யாரை ஏமாற்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தார்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். அதேசமயம் இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், இன்று சென்னை மதுரவாயல் பகுதியில் திமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தொடர்ந்து மணமக்களை வாழ்த்திய அவர் பேசியதாவது, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்.
ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் நிலை என்ன?. தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை மூட மத்திய அரசு அனுமதி தந்துவிட்டதா?.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தது யாரை ஏமாற்ற?. காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்பது பற்றி மக்களவையில் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு அரசு பதிலளிக்கவில்லை.
உள்ளாட்சி, எம்.பி. தேர்தல் தோல்வி காரணமாக வேளாண் மண்டல அறிவிப்பை முதல்வர் வெளியிடுகிறார். தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் விரைவில் வரும் எனவும் கூறியுள்ளார்.