This Article is From Nov 20, 2018

சத்தீஸ்கரில் 2-வது கட்டமாக நாளை தேர்தல் 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெறும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. 65-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதை அக்கட்சி இலக்காக வைத்துள்ளது

சத்தீஸ்கரில் 2-வது கட்டமாக நாளை தேர்தல் 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு

முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

Raipur:

சத்தீஸ்கர் மாநிலத்தில் 19 மாவட்டங்களில் இரண்டாவது கட்டமாக 72 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகளால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் 18 தொகுதிகளில் கடந்த 12-ம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 65-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.

இங்கு கட்சிகளைப் பொருத்தவரையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.

நாளை காலை 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் 72 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 1,079 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 1,53,85,983 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 77,46,628 பேர் ஆண்கள், 76,38,415 பேர் பெண்கள், 940 பேர் மூன்றாம் பாலினத்தவர். தேர்தலையொட்டி 19,296 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள கரியாபந்த், தம்தாரி, மஹாசுமந்த், கபிர்தாம், ஜாஷ்பூர் மற்றும் பல்ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

.