கொரோனா பாதிப்பால் ஏப்ரலில் வெளியிடவேண்டிய பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் டாப் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அரசு நிறுவனங்களில் மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பட்டியலில் சென்னை ஐஐடிக்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை தேசிய தரவரிசை பட்டியல் நிறுவனமான NIRF தயாரித்துள்ளது. இந்த பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
ஓராண்டில் ஒவ்வொரு அரசு கல்வி நிறுவனங்களும் செய்தவற்றின் அடிப்படையில் NIRF தர வரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்படும்.
NIRF வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிடும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தாண்டு 9 ஐஐடி கல்வி நிறுவனங்களும், ஒரேயொரு ஐஐடி சாராத கல்வி நிறுவனமும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் டாப் 10 பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியல்
1. ஐஐடி மெட்ராஸ்
2. ஐஐடி டெல்லி
3. ஐஐடி மும்பை
4. ஐஐடி கான்பூர்
5. ஐஐடி காரக்பூர்
6. ஐஐடி ரூர்கீ
7. ஐஐடி கவுகாத்தி
8. ஐஐடி ஐதராபாத்
9. தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் திருச்சி.
10. ஐஐடி இந்தூர்.
என்.ஐ.ஆர்.எஃப் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2015 இல் அங்கீகரிக்கப்பட்டது. முதன் முதலில் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை ஏப்ரல் 4, 2016 அன்று அப்போதைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானியால் அறிவிக்கப்பட்டது.
தரவரிசைக்காக அமைக்கப்பட்டிருக்கும் வல்லுநர்கள் கமிட்டி குழு பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை செய்யப்படுகிறது. இது "கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள்", "ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறைகள்," "பட்டமளிப்பு முடிவுகள்," உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)