This Article is From Dec 31, 2018

2018-ல் தமிழகத்தில் நடந்த ‘டாப் 10’ அரசியல் பரபர..!

இந்தாண்டு அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய டாப் 10 விஷயங்களை மட்டும் தொகுத்துத் தந்துள்ளோம்

2018-ல் தமிழகத்தில் நடந்த ‘டாப் 10’ அரசியல் பரபர..!

தமிழகத்தின் கடந்த 50 ஆண்டு கால அரசியலை நேரடியாகவோ மறைமுகமாகவோ தீர்மானித்தது கருணாநிதி. அதேபோல கடந்த 25 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முத்திரைப் பதித்தது ஜெயலலிதா. இரு பெரும் ஆளுமைகள் இல்லாததால், மத்திய அரசு இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறது இன்றைய அதிமுக அரசு. இவர்களை அடையாளம் காட்டியே தங்களை தூய்மைபடுத்திக் கொண்டு கமல், ரஜினி போன்றவர்கள் நேரடியாக முதல்வர் ஆகும் கனவில் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இப்படி கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப அனைத்துத் தரப்பினரும் கங்கனம் கட்டிக் கொண்டு தமிழக அரசியலில் கடை விரித்துள்ளனர். இதனால் 2018 ஆம் ஆண்டில், அரசியல் பரபரப்புகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் ஏற்படவில்லை. இந்தாண்டு அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய டாப் 10 விஷயங்களை மட்டும் தொகுத்துத் தந்துள்ளோம்.

 

கமல்ஹாசன் கட்சித் தொடங்கியது:

 

r4e1qopg

திரைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் முடிசூடா மன்னனாக வலம் வந்த கமல்ஹாசன், 2017 ஆரம்பம் முதல் அதிமுக அரசை, ட்விட்டர் மூலம் விமர்சிக்க ஆரம்பித்தார். ‘இவர் வெறும் ட்விட்டர் அரசியல்வாதி' என்று வெறுப்பேற்றப்பட்ட போது, ‘அரசியல் கட்சிகளைத் திருத்த நான் சொந்தக் கட்சித் தொடங்கவும் தயங்கமாட்டேன்' என்று எச்சரித்தார். சொன்னபடியே, இந்த ஆண்டு பிப்ரவரி, 21-ல் ‘மக்கள் நீதி மய்யம்' கட்சியைத் தொடங்கினார். ஜெயலலிதாவும் கருணாநிதியும் அரசியலில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது நடிகராக மட்டுமிருந்த கமல், அதற்கு பின்னர் ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக அரசியலிலும் எதிர் நீச்சல் போட வந்துள்ளார். கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையப் போகும் நிலையிலும் இன்றுவரை கொள்கை, கோட்பாடு குறித்து மட்டும் பேசாமல் காரியம் சாதித்து வருகிறார். அவரின் கடந்த கால அணுகுமுறைகளை வைத்து பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், இனி வரும் காலங்களில் களத்தில் கமலின் செயல்பாடுகள்தான் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்.

 

செயல் தலைவர், தலைவர் ஆனார்:

 

3pma0be8

‘அவசர நிலை'-யின்போது மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட காலத்துக்கு முன்பிருந்தே கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின், திமுக மூலம் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடந்த அரை நூற்றாண்டில் ஸ்டாலினுக்கு நிகராக திமுக-வில் உழைத்தவர்கள் மிகச் சொற்பமானவர்களே எனலாம். இருந்தும், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்னராவது கிடைத்திருக்க வேண்டிய ‘தலைவர்' பதவி, ஸ்டாலினுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட், 28-ல்தான் கிடைத்தது. இவ்வளவு காலம் கழித்து வந்தாலும், ஸ்டாலின் இனி ஆற்றப் போகும் செயல் தான், தலைவர் பதவிக்கு அவர் தகுதியானவரா என்பதை எடுத்துக் காட்டும். மு.க.அழகிரி-யை இடம் தெரியாமல் ஒதுக்கி வைத்ததன் மூலம் தனது முதல் டெஸ்ட்டில் பாஸ் செய்துள்ளார் ஸ்டாலின்.

 

செந்தில் பாலாஜி கட்சித் தாவல்:

 

ii4akboo

திமுக-விலிருந்து பிரிந்து சென்று அதிமுக-வில் சேர்ந்த செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவி என்று சுக போகங்களை அனுபவித்தார். சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால், தனக்கான எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தை இழந்தார். டிடிவி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலாளராக பணி செய்து வந்த செந்தில் பாலாஜிக்கும், கட்சியின் தலைவரான தினகரனுக்கும் சில மாதங்களாக முட்டல் மோதல் இருந்தது. எப்படியும் செந்தில் பாலாஜி ஆளுங்கட்சியான அதிமுக பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் சேர்ந்து பலருக்கு ஷாக் கொடுத்தார்.

திமுக-வில் சேர்ந்த உடன் அளித்த முதல் பேட்டியில், ‘எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் கூட திமுக-வில் இணையும் காலம் வெகு தொலைவில் இல்லை' என்ற பகீர் கருத்தைக் கூறினார். திமுக-வில் செந்தில் பாலாஜி எத்தனை நாள் இருப்பாரோ என்று, தமிழக அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது.

 

எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஓராண்டு நிறைவு:

 

lp0jfboo

சென்ற ஆண்டு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற பிறகு, ‘வரும் தைப் பொங்கலின் போது எடப்பாடியின் ஆட்சி கவிழ்க்கப்படும்' என்று சூளுரைத்தார். இதோ, அடுத்த தைப் பொங்கலே வரப் போகிறது. இன்னும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர். அதிமுக-தான் ஆளுங்கட்சி. பிப்ரவரி 16-ம் தேதியுடன் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, யாரென்றே தெரியாத வகையில் பொதுப் பணித் துறையைப் பார்த்து வந்தவர் எடப்பாடி. ஆனால், இன்று அதிமுக-வின் முகமாக மாறியுள்ளார். யாரால் முதல்வர் ஆக்கப்பட்டாரோ அவர்களையே கட்சியிலிருந்து நீக்கிய ‘தில்' எடப்பாடியையே சாறும்.

ஒரு புறம் எடப்பாடியின் ஆளுமைத் திறனால் கட்சியைக் கைக்குள் கொண்டு வந்து, ஆட்சியை பிரச்னையில்லாமல் நடத்தினாலும், ‘இன்னும் எத்தனை நாளைக்கு' என்று கேள்வி மட்டும் விட்டபாடில்லை. உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என எதையும் சந்திக்கும் நிலையில் இன்றைய அதிமுக இல்லை என்பதே தொடர்ந்து தேர்தல் தேதியைத் தள்ளிப்போடும் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

 

டிடிவி தினகரன் ‘அமமுக' தொடங்கியது:

 

98043ar8

‘அதிமுக-வையும் இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்றுவதே எனது முக்கிய நோக்கம். அதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று அமமுக குறித்து மார்ச் 15-ல் பிரகடனம் செய்தார் சசிகலாவின் அக்கா மகனான டிடிவி தினகரன். ஆர்.கே.நகர் வெற்றியைத் தவிர, டிடிவி-யின் அரசியல் ரீ-என்ட்ரியில் சொல்லிக் கொள்ளும்படி எந்த வெற்றியும் கிட்டிவிடவில்லை. ஆரம்பத்தில் தினகரனுடன் இருந்த திவாகரன், செந்தில் பாலாஜி என பல முக்கியப் புள்ளிகள் இன்று அவருடன் இல்லை. தொடர்ந்து அமமுக முகாமிலிருந்து தன்னிச்சையான கருத்துகள் ஒலிக்கின்றன. அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்று தினகரன் நினைத்தாலும், எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறார். ‘இடைத் தேர்தல் வந்தால் 20 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்' என்று டிடிவி நம்புகிறார். 20-ல் பத்து தொகுதிகளையாவது தன் வசமாக்கினால்தான் தினகரனுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும். ஒரு வகையில் இடைத் தேர்தலில் யார் அதிக தொகுதிகளை கைப்பற்றுகிறார்களோ, அவர்கள் பக்கமே அதிமுக சாயும். தினகரனுக்கும் சரி, ஈபிஎஸ்-ஓபிஎஸ்.ஸுக்கும் சரி அடுத்து நடக்கவுள்ள எந்தத் தேர்தலும் அக்னிப் பரீட்சைதான்.

 

ஜெயலலிதா ஆடியோ லீக்:

 

g5dje5bo

வாழும்போதும் சரி வாழ்க்கைக்குப் பிறகும் சரி, மர்மம் சூழ் பிம்பத்திலேயே இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2016, டிசம்பர் 5 ஆம் தேதி சிகிச்சைப் பலனில்லாமல் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மறைந்த பின்னர், அவர் தொடர்பான எந்த விவரமும் பொது வெளியில் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வம், ‘ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும்' என்று கூறி பகீர் கிளப்பினார். இந்தக் கருத்தைச் சொல்லும்போது ஓபிஎஸ்-தான் தமிழக முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை தமிழக அரசு சார்பில் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ஜெ., மரணம் தொடர்பான விசாரணையை முடிக்கவில்லை.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடக்க ஒரு நாள் இருந்த நிலையில் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் வீடியோ காட்சிகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜெயலலிதா, அப்போலோ மருத்துவர்களிடம் பேசும் ஒரு ஆடியோ பதிவு லீக் ஆனது. எத்தனை லீக்ஸ் வந்தாலும், ஜெயலலிதா தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவி வரும் சந்தேகங்கள் மட்டும் ஓய்ந்தபாடில்லை.

 

ஜெயக்குமார் ஆடியோ லீக்:

 

2auqb90g

அக்டோபர் மாத இறுதியில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவின் ஆண் குரல், தன்னால் கர்ப்பமான ஒரு பெண் குறித்து பேசியது. அந்த ஆண் குரலுக்குச் சொந்தக்காரர் ஜெயக்குமார் தான் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அடுத்த நாளே குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். அதே நாளில், செய்தியாளர்கள் முன்னிலையில் பேட்டியளித்த தினகரன் தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல், ‘அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது ஜெயக்குமார்தான். அவருக்கு இப்போது தம்பி பாப்பா பிறந்துள்ளது' என்று கூறி பகீர் கிளப்பினார். அடுத்தடுத்து வந்த அரசியல் பரபரப்புகளால் இந்த ஆடியோ லீக் விவகாரம் கண்டுகொள்ளப்படவில்லை.

 

ஓபிஎஸ் - தினகரன் ரகசிய சந்திப்பு:

 

0jferd4g

‘ஒரு பக்கம் தர்ம யுத்தம் செய்து கொண்டு, இன்னொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் செய்த வேலை என்ன தெரியுமா..? 2017-ல் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்த பின்னர் ஓபிஎஸ் என்னை ரகசியமாக சந்திக்கத் தூது விட்டார். நானும் சந்தித்தேன். அப்போது கூட, இந்த ஆட்சி சரியில்லை. நீங்களே தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினார்' என பகீர் கிளப்பும் கருத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்தார் டிடிவி தினகரன். அவர் மேலும், ‘அவ்வளவு ஏன், மீண்டும் என்னை சந்திக்க வேண்டுமென்று சில வாரங்களுக்கு முன்னர் கூட மீண்டும் தூது விட்டார் ஓபிஎஸ். இதுதான் அவரின் யோக்கியம்' என்றார் சிரித்துக் கொண்டே.

இந்தக் கருத்துக்கு ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதுவரை சரிவர விளக்கம் அளிக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர் செல்வத்துக்கும் இடையில் இன்னும் இருக்கும் உரசல்தான் இதைப் போன்ற தகவல்கள் மேலும் மேலும் உணர்த்துகின்றன.

 

திமுக முன்னாள் எம்.எல்.ஏ பாலியல் குற்றவாளி:

 

6430uq88

பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராஜ்குமார், கடந்த 2012-ம் ஆண்டு அவரது வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்து கொன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைந்துவிசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் டிசம்பர் 28-ம் தேதி, ராஜ்குமார் குற்றவாளிதான் என்பது உறுதியானது. அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. எம்.பி, எம்.எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் முதல் தீர்ப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடூர சம்பவத்துக்கு திமுக எப்படி எதிர்வினையாற்றப் போகிறது என்பது கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. 

 

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்:

 

to1v1id8

ஒரு வேலை தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருந்தால், ஒன்று அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும். அல்லது, தினகரன் கையில் கட்சியும் ஆட்சியும் வந்திருக்கும். தமிழக வரலாற்றிலேயே மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்திய 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கின் தீர்ப்பு இந்தாண்டு அக்டோபர் 25 ஆம் தேதி, எடப்பாடி அணிக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சி மேலும் சில காலம் தொடர தீர்ப்பு வழிவகை செய்துவிட்டது. 18 எம்.எல்.ஏ-க்கள் தரப்பு, ‘மேல்முறையீடு இல்லை. மக்கள் மன்றத்தில்தான் முறையீடு' என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அமமுக, திமுக மட்டுமல்ல ஒருவகையில் ஒட்டு மொத்த தமிழ்நாடும் தேர்தலை நோக்கித் தான் காத்திருக்கிறது.

.