New Delhi: புதுடெல்லி: கும்பல் அடக்குமுறையையே தடுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒருவாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதி மன்றம் கெடு விதித்துள்ளது. முன்பு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு 9 மாநிலங்கள் மட்டுமே பதில் அளித்திருந்தன. இதையடுத்து மற்ற மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உச்ச நீதிமன்றம் ஒருவாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சம்மன் அனுப்பப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்களை கும்பலாக சேர்ந்து அடித்துக் கொல்லும் சம்பவங்கள் வட மாநிலங்களில் நடந்தன. இதில் கடந்த ஓராண்டில் மட்டும் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் கடந்த ஜூலை 17ம் தேதி நீதிபதிகள் முக்கிய உத்தரவை பிறப்பித்தனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகளை அடித்துக் கொல்வது என்பது பயங்கரமான செயல் என்றும், சட்டத்தை மீறி நடக்கும் இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு கடுமையான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்காக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சமூக நல அமைச்சர் தவர் சந்த கெலாட் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதன் பின்னர் கடந்த ஜூலை 20ம் தேதி அரியானாவை சேர்ந்த ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். ரக்பர் கான் என்ற அவர் தனது நண்பர் அஸ்லம் என்பவருடன் பசுக்களை வாகனத்தில் கொண்டு சென்றார். இருவரையும் கோல்கான் பகுதியில் மறித்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கியது. இதில் ரக்பர் கான் உயிரிழந்தார்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தடுக்க ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் தலைவர் டெஹஸீன் பூனாவாலா உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கவில்கர் மற்றும் டி. ஒய். சந்திரா சூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.எஸ்.ஐ. ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், 2 கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜஸ்தான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கும்பல் அடக்குமுறையையே தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 9 மாநில அரசுகள் மட்டுமே அறிக்கை அளித்துள்ளதாக கூறினார். மற்ற மாநில அரசுகள் ஒருவாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.