மம்தா புகைப்படத்தை மார்பிங் செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் பிரியங்கா.
New Delhi: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கேலி செய்து பதிவிட்ட, பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கம் மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை கேலி செய்யும் விதமாக அவரது புகைப்படத்தை, அமெரிக்காவில் நடைபெற்ற மெட்காலா நிகழ்வில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்துடன் மார்பிங் செய்து பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவும் பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை வெளியிட்டதாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து காவலில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவுக்கு உச்சீநிதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
மேலும், மன்னிப்பு கோருவதில் எதுவும் சிரமம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியது. மற்றவர்களின் உரிமையை பாதிக்கும் போது, பேச்சு சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் சர்மாவின் வழக்கறிஞர் வாதாடுகையில், ஒருவர் மீம்ஸ் போட்டதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்றால், கேலிச்சித்திரம் வரைபவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், பிரியங்கா ஷர்மா இந்த புகைப்படத்தை மார்ப்பிங் செய்யவில்லை என்றும் அவர் பாஜகவில் இருப்பதால் மட்டுமே மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பிரியங்கா சர்மாவின் தாயார், அனைவரையும்போல் என் மகளும் இதை ஷேர் செய்துள்ளார். ஆனால், அவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்துடன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.