Air Pollution Issue - “இதனால் நாடு 100 ஆண்டுகள் பின் தங்கப் போகிறது,”
New Delhi: வட இந்தியாவில் (North India) பெரும் பாதிப்புகளை உருவாக்கி வரும் காற்று மாசுவைக் (Air Pollution) கட்டுப்படுத்த தவறியதற்காக டெல்லி (Delhi), உத்தர பிரதேசம் (UP), பஞ்சாப் (Punjab) மற்றும் அரியானா (Haryana) மாநில உயர் அதிகாரிகள் மீது சினங்கொண்டுள்ளது உச்ச நீதிமன்றம் (Supreme Court). இன்று இந்த விவகாரம் குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, “அதிகாரிகளை தண்டிக்கும் நேரம் வந்துவிட்டது,” என்று உஷ்ணமாகியுள்ளது.
இன்று வட இந்திய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது பஞ்சாபின் தலைமைச் செயலர், ‘இந்தப் பிரச்னைக்கும் நான்தான் காரணம்,' என்று சொன்னவுடன், நீதிமன்றம், “எதற்காக நீங்கள் பஞ்சாபின் தலைமைச் செயலாளராக இருக்கிறீர்கள்,” என்று கேள்வியெழுப்பியது.
“மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். 1800 என்பதுதான் தற்போது மாசுவின் அளவு. விமானங்கள் வேறு பாதைக்குத் திருப்பப்படுகின்றன. உங்கள் சாதனையை நினைத்துப் பெருமைப்படுகிறீர்களா..?,” என்று இரண்டு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தலைமைச் செயலாளர்கள்க் கேட்டது.
வருடா வருடம், ஆண்டின் இறுதியில் டெல்லியில் ஏற்படும் காற்று மாசுவிற்கு முக்கிய காரணமாக, பஞ்சாப் மற்றும் அரியானாவில் எரிக்கப்படும் மீந்துபோன விவசாய சுள்ளிகளில் இருந்து வரும் புகைதான் பங்கு வகிக்கிறது. இந்த முறை மொத்த வட இந்தியாவும் இதனால் பாதிப்படைந்துள்ளது.
நேற்று, உச்ச நீதிமன்றம், “இனிமேலும் விவசாயிகள் சுள்ளிகளை எரிக்கக் கூடாது,” என்று தடை உத்தரவு போட்டனர். ஆனாலும், கடந்த 24 மணி நேரத்தில் 7,000 இடங்களில் தீ மூட்டப்பட்டுள்ளன. இது அதிகமாக பஞ்சாபில்தான் நடந்தது.
தடைகளை மீறி விவசாயிகள், சுள்ளிகளை எரிப்பதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அது குறித்து நீதிமன்றம், “விவசாயிகள், சுள்ளிகளை அப்புறப்படுத்த சரியான வழிகாட்டுதல்களை நீங்கள் வழங்க வேண்டும். அதை விடுத்து ஏழை விவசாயிகளுக்கு அபராதம் போடுகிறீர்கள். ஆனால், அதிகாரிகளான நீங்கள்தான இந்த அனைத்திற்கும் காரணம். பஞ்சாப், அரியானா, டெல்லி மற்றும் உத்தர பிரதேச அதிகாரிகள்தான் இந்தப் பிரச்னைக்குப் பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் குடிமக்கள் பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது. நாங்கள் அனைத்தையும் சரி செய்கிறோம்,” என்று கொதிப்படைந்தது.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், 2 லட்சம் விவசாயிகளைக் கட்டுப்படுத்துவது முடியாக காரியம் என்று சொன்னபோது, நீதிமன்றம், “இதனால் நாடு 100 ஆண்டுகள் பின் தங்கப் போகிறது,” என்று பதிலடி கொடுத்தது.
பஞ்சாப் தலைமைச் செயலாளர், தங்களிடம் இந்த நிலைமையை சமாளிக்கப் போதுமான நிதி இல்லை என்று சொன்னபோது, “உங்களிடம் நிதி இல்லை. உங்களிடம் இதை சமாளிக்கத் திட்டம் இல்லை. நீங்கள், தலைமைச் செயலாளராக இருக்கவே தகுதி இல்லை,” என்று வறுத்தெடுத்தனர்.
டெல்லியில் காற்று மாசுவிற்கு கட்டுமானப் பணிகளும், குப்பை எரித்தலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது குறித்து நீதிமன்றம், “டெல்லிதான் நாட்டின் தலைநகரம். உங்களிடம் இருந்த நிதி என்ன ஆனது. மக்கள் இதற்குப் பொறுப்பாக மாட்டார்கள். நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இது அனைத்தும் உங்கள் தவறுதான்,” என்று கடுகடுத்தது.