சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் மீட்பு படையினர் மீட்க போராடும் காட்சி
New Delhi: மேகாலயாவில் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை நடந்து வரும் நிலையில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகளை அதிவிரைவு படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே. கவுல் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது. அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதால் விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொதுநல வழக்கை ஆதித்யா என்.பிரசாத் என்பவர் தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், மத்திய மற்றும் இதர அதிகாரிகள் அவசர கால அடிப்படையில் மீட்பு பணிகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி 15 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் சந்தேகமாக உள்ளன.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.