This Article is From Nov 13, 2019

'2 காரணங்களுக்காக அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்க்கவில்லை' :சன்னி வக்ப் வாரிய தலைவர் பேட்டி!

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் இந்தியாவில் நடைபெறவில்லை.

'2 காரணங்களுக்காக அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்க்கவில்லை' :சன்னி வக்ப் வாரிய தலைவர் பேட்டி!

சன்னி மத்திய வக்ப் வாரியத்தின் தலைவர் ஜாபர் பரூக்கி.

Lucknow:

2 முக்கிய காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் அளித்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, மறு சீராய்வுக்கு செல்லவில்லை என்று முஸ்லிம் அமைப்பின் முக்கிய தலைவர் NDTVக்கு பேட்டியளித்துள்ளார். 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் உரிமை கேட்டு வழக்குத் தொடர்ந்தவர்களில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சன்னி மத்திய வக்ப் வாரியமும் ஒன்று. சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பாக சன்னி வக்ப் வாரியத்தின் தலைவர் ஜாபர் பரூக்கி NDTVக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

2 முக்கிய காரணங்களுக்காக அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் எதிர்க்கவில்லை. முதலாவது தீர்ப்பு எப்படி வந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம்.

இரண்டாவது, அயோத்தி விவகாரத்தை கடந்த சில ஆண்டுகளாக சமூக பிரிவினையை ஏற்படுத்தும் கருவியாக சில சக்திகள் பயன்படுத்தின. இப்போது நாங்கள் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தால், அது நிலைமையை மோசமாக்கி விடும் என்பதை உணர்கிறோம். 

அயோத்தி வழக்கில் சன்னி வக்ப் வாரியம் உள்பட பல அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை. எங்களைப்போல் செயல்பட வேண்டும் என்று யாரையும் நான் கட்டாயப்படுத்த முடியாது. 
இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, அயோத்தி வழக்கில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து முஸ்லிம் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

முதலில் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்திற்குள்ளாக தங்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும், வேறு இடத்தில் அரசு வழங்குவதாக இருந்தால் அதனை தாங்கள் ஏற்கப்போவதில்லை என்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

.