தமிழகத்தில் மொத்தமாக 234 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 234 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது
- பாதிக்கப்பட்ட அனைவரும் டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
இந்தியாவில் புதன்கிழமையான நேற்று மட்டும் 437 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை 41 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்றும், இதுவரை மொத்தமாக 144 பேர் கொரானாவிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 110 பேருக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 234 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் நிஜாமுதீனில் கடந்த மாதம் நடந்த மத மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அவர்களில் 110 பேருக்கு நேற்று கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவின் தாக்கம் இந்திய அளவிலும், உலக அளவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அதற்கு உரிய மருந்து கண்டுபிடிக்க ஒரு ஆண்டாவது ஆகும் என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவுக்கு பாரம்பரிய முறையில் சித்த மருத்துவம் மூலம் மருந்து உள்ளது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், எதுவும் இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர், அன்புமணி ராமதாஸ், “கொரோனாவுக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும். நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.