This Article is From Sep 13, 2019

“சாலைகள் இப்போதுதான் நன்றாக உள்ளன…”- பாஜக சைடு கோல் அடிக்கும் கெஜ்ரிவால்!

எதிர்க்கட்சிகள் ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் கேரளாவில் புதிய அபராதங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தில் புதிய அபராத நடைமுறை பின்பற்றப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

New Delhi:

மத்தியில் ஆளும் பாஜக அரசு, சாலை விதிமீறல்களுக்கான அபராதங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளதற்கு, அக்கட்சி ஆளும் மாநிலங்கள் கூட ஆதரவு தெரிவிக்காமல் இருக்கலாம். ஆனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “அபராதங்கள் உயர்த்தப்பட்ட பின்னர்தான் சாலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன” என்று மத்திய அரசுக்கு நற்சான்று வழங்கியுள்ளார். 

அவர் மேலும், “புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து டெல்லி டிராஃபிக்கில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அதே நேரத்தில் எதாவது விதிமுறையால் மக்கள் அதிக பிரச்னைகளை சந்தித்தால் அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

புதிய அபராதங்களை முதன்முதலாக நிராகரித்தது பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தான். சில அபராதங்களை 10 மடங்கு வரைக்கூட குஜராத் அரசு குறைத்துள்ளது. அதேபோல பாஜக ஆளும் பிற மாநிலங்களான மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா போன்றவையும், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றால், அதை பின்பற்ற முடியாது என்று தெரிவித்துள்ளன. 
 

6onqqov

செப்டம்பர் 1 ஆம் தேதி, புதிய அபராத விதிமுறைகள் அமலுக்கு வந்தன

எதிர்க்கட்சிகள் ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் கேரளாவில் புதிய அபராதங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தில் புதிய அபராத நடைமுறை பின்பற்றப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அபராதங்கள் விதிப்பதில் புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததில் இருந்து, வாகன ஓட்டிகளுக்குப் போடப்படும் அபராதம் குறித்தான செய்திகள் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வருகிறது. புபனேஷ்வரில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு விதிமீறல் காரணமாக 47,500 ரூபாய் ஃபைன் விதிக்கப்பட்டது. டெல்லியில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட லாரி டிரைவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதிக அபராதம் போட்டதால், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது இரு சக்கர வாகனத்துக்குத் தீ வைத்த சம்பவமும் நடந்துள்ளது. 

“சில மாநிலங்கள் அபராதத் தொகையைக் குறைக்கின்றன. பணத்தைவிட வாழ்க்கை முக்கியமில்லையா? இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டதற்குக் காரணம், வாழ்க்கை காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில்தான்” என்று NDTV-க்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.


 

.