சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிரடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
New Delhi: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் இதுவரைக்கும் விதிக்கப்பட்டு வந்த ரூ. 2 ஆயிரம் அபராதத்தொகை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. மோட்டார் வாகன சட்டம் (திருத்தப்பட்டது) 2019-ன்படி, தற்போது விதிக்கப்பட்டு வரும் போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
புதிய சட்ட திருத்தத்தின்படி, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டினால் அபராதம் ரூ. 500-லிருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக வேகமாக ஓட்டினால் அபராதம் ரூ. 400 லிருந்த ரூ. ஆயிரமாகவும், ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் அபராதம் ரூ. 1,000 லிருந்து ரூ. 5 ஆயிரமாகவும், மதுபானம் அருந்தி விட்டு ஓட்டினால் ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாகவும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் அபராதம் ரூ. 100 லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக ஆட்களையோ,பொருட்களையோ ஏற்றிச்செல்பவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட வயதை விட குறைந்த வயதுடையவர் வாகனத்தை ஓட்டினால் அதற்கு, காப்பாளர் அல்லது வாகன உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், வாகனப் பதிவு ரத்தும் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.