2017-ல் மட்டும் 1.5 லட்சம்பேர் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்.
New Delhi: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் இதுவரைக்கும் விதிக்கப்பட்டு வந்த ரூ. 2 ஆயிரம் அபராதத்தொகை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் செப்டம்பர் 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
மோட்டார் வாகன சட்டம் (திருத்தப்பட்டது) 2019-ன்படி, தற்போது விதிக்கப்பட்டு வரும் போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, 'மக்களின் நலன் கருதித்தான் விதிமீறல் அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விபத்துகள் குறையும். மக்களுக்கு பல நலன்கள் ஏற்படும். தற்போதுள்ள அபராத தொகை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கத்தில் இருந்து வருகிறது. எனவே அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது' என்றார்.
புதிய சட்ட திருத்தத்தின்படி,
லைசன்ஸ் இல்லாமல் ஓட்டினால் அபராதம் ரூ. 500-லிருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக வேகமாக ஓட்டினால் அபராதம் ரூ. 400 லிருந்த ரூ. ஆயிரமாகவும், ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் அபராதம் ரூ. 1,000 லிருந்து ரூ. 5 ஆயிரமாகவும், மதுபானம் அருந்தி விட்டு ஓட்டினால் ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாகவும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் அபராதம் ரூ. 100 லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மத்திய அரசு சாலைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் என்று சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 2017-ம் ஆண்டில் விபத்துகளால் மட்டும் 1.5 லட்சம்பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
(With Inputs From ANI)