ரயில் பெட்டிகள் பற்றி எரியும் காட்சி.
Islamabad: பாகிஸ்தானில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசம் ஆகின. இதில் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரகிம் யர் கான் என்ற பகுதி உள்ளது. இங்குதான் இன்று கோரமான தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தளவில் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ரயில் வழித்தடங்கள்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
ரயில்வேயை மேம்படுத்துவதற்கு போதிய நிதியை அந்நாட்டு அரசு ஒதுக்குவதில்லை. இதனால், பராமரிப்பு இல்லாமல் ரயில்கள் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதன் விளைவாக அங்கு அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்தவர்கள், மதிய உணவை சமைக்கத் தொடங்கினர். இதற்காக 2 அடுப்புகள், எண்ணெய், கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டது. கூடவே எண்ணெயும் இருந்ததால் தீ மளமளவென பற்ற எரியத் தொடங்கியது.
தீ விபத்தில் சிக்கியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டும் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தப்பிச்செல்வதற்காக வெளியே குதிக்க முயன்றவர்களுக்கும் தீ விபத்தில் சிக்கினறனர். அந்த வகையில் 65 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகாயத்துடன் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தின்போது 11 பேரும், செப்டம்பரில் ஏற்பட்ட விபத்தின்போது 4 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.