This Article is From Dec 21, 2018

அரசு பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி படிக்கும் அரசு பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி படிக்கும் அரசு பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஒரே வளாகத்தில் இருக்கும் இடங்களில் 2019-20-ஆம் கல்வி ஆண்டு முதல் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 2,383 அரசு நடுநிலைப் பள்ளிகளில் முதல் கட்டமாக இந்த திட்டத்தைச் செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தினால் சுமார் 52,995 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,

தமிழகத்தில் வரும் ஜனவரி 3வது வாரத்துக்குள் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும். இதன் மூலம் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 51 ஆயிரம் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறுவர்

பிளஸ்-2 வகுப்பு முடியும் போதே மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளிகளுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

இந்தாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும் என 4 வகை சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.


 

.