This Article is From Jul 30, 2020

எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் மும்மொழிக்கொள்கை பின்பற்றப்படவில்லை: திருமா கண்டனம்!

உயர் கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கு இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது.

Advertisement
இந்தியா Posted by

எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் மும்மொழிக்கொள்கை பின்பற்றப்படவில்லை: திருமா கண்டனம்!

எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் மும்மொழிக்கொள்கை என்பது பின்பற்றப்படவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை வரைவு 2020க்கு மத்திய அமைச்சரவை நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் பெயரை கல்வித்துறை என பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது, அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் மீது கடந்த 31.7.2019 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது கருத்துக்களை ஒரு மனுவாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலிடம் வழங்கினோம். எம்மைப் போலவே பல்வேறு கட்சிகளும் தேசிய கல்வி கொள்கை தொடர்பாகத் தமது கருத்துக்களை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர். அவை எதையுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தமது வரைவு அறிக்கையில் எந்தத் திருத்தத்தையும் செய்யாமல் மீண்டும் அதே அறிக்கையை இப்பொழுது நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்காமல், மாநில அரசுகளின் கருத்தை அறியாமல் நடைமுறைப்படுத்த முற்படுவது முழுக்க முழுக்க மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயலாகும்.

Advertisement

எல்லாவற்றுக்கும் மேலாக மும்மொழிக் கொள்கையை இந்த தேசிய கல்விக் கொள்கை திணிக்கிறது. எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் மும்மொழிக்கொள்கை என்பது பின்பற்றப்படவில்லை. ஒரு மொழிக் கொள்கை, இருமொழிக் கொள்கை மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பிறர் மீது திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இந்தித் திணிப்பை ஒருகாலும் ஏற்கமாட்டார்கள்.

உயர் கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கு இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. மருத்துவப் படிப்பைப்போலவே எல்லா விதமான பட்டப் படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டுவருவது பெரும்பாலானவர்களை உயர் கல்வி பெறாமல் தடுப்பதற்குத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சூழ்ச்சியே தவிர வேறு அல்ல.

Advertisement

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் விதமாகவும், கல்வியை காவிமயமாக்கும் நோக்கத்தோடும் கொண்டுவரப்படும் இந்த கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement