हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 03, 2018

விமான நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்ட திரிணாமூல் கட்சியினர்… அசாமில் பரபர!

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் நேற்று அசாம் மாநில, சில்சார் விமானநிலையத்துக்குச் சென்றுள்ளனர்

Advertisement
இந்தியா ,

Highlights

  • அசாமின் சில்சார் விமானநிலையத்தில் திரிணாமூல் கட்சியினர் தடுக்கபட்டனர்
  • இறுதி குடியுரிமை வரைவு குறித்து பிரசாரம் செய்ய அவர்கள் சென்றிருந்தனர்
  • விமானநிலையத்திலேயே பல மணி நேரம் அவர்கள் இருந்தனர்
Silchar, Assam:

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் நேற்று அசாம் மாநில, சில்சார் விமானநிலையத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்று மக்கள் மத்தியில் ‘இறுதி குடியுரிமை வரைவு’-க்கு எதிராக பிரசாரம் செய்யலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால், அவர்கள் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டனர். இன்று காலை அங்கு சென்ற 8 பேரில் 6 பேர் புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மீதம் உள்ள இருவரும் இன்று மதியம் புறப்பட்டுவிடுவர் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள், விமானநிலையத்தில் இவ்வாறு சிறை வைக்கப்பட்டது இந்திய அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

விமானநிலையத்திலிருந்து வெளியான சில வீடியோக்களில் போலீஸுக்கும் திரிணாமூல் கட்சியினருக்கும் இடையில் தள்ளு முள்ளு நடப்பது பதிவாகியிருந்தது. ஒரு வீடியோ காட்சியில், திரிணாமூலைச் சேர்ந்த பெண் மக்கள் பிரதிநிதி போலீஸாரின் பிடியிலிருந்து விலகி ஓடுவது பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மம்தா பானர்ஜி நேற்று, ‘அசாமில் ஒரு அவசர நிலை இருக்கிறது. நாங்கள் மக்களிடம் பேசக் கூடாது என்று நினைக்கிறார்கள்’ என்று கருத்து கூறினார். 
 

அசாம் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் இறுதி குடியுரிமை வரைவு வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. அவர்கள் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால், மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவர் என்று தெரிகிறது. அசாமில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் தேசிய குடிமக்கள் பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம் அகதிகளை குறிவைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகறிது. இதை எதிர்த்து பிரசாரம் செய்யத்தான் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு அசாமிற்கு விரைந்தது. 

இந்நிலையில் அசாம் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டது குறித்து திரிணாமூல் எம்.பி ஓபிரெய்ன், ‘எங்கள் கட்சியினர் பலவந்தமாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். என்ன நடக்கிறது நாட்டில்?’ என்று கொதித்துள்ளார்.

Advertisement

மம்தா பானர்ஜியோ, ‘இது முடிவின் ஆரம்பம். பாஜக-வினர் மிகவும் அதிகமான அழுத்தத்தில் இருக்கின்றனர். அதனால்தான் தற்போது பலவந்தமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். 
 

Advertisement