திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சினிக்கிழமையன்று சுட்டுகொல்லப்பட்டார்.
Kolkata: மேற்குவங்க மாநிலம் மஜிதியா பகுதியில் விழா ஒன்றில் கலந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, நாடியா மாவட்டம் கிருஷ்ணகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ், அந்த பகுதியில் நடந்த சரஸ்வதி பூஜை விழாவினை துவங்கி வைப்பதற்காக வந்த சமயத்தில் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்றனர்.
இந்த கொலை சம்பவத்தின் போது, நாடியா மாவட்டம் கிருஷ்ணகஞ்ச் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ், ஒரு சிறு கூட்டத்தினர் முன்பு நாற்காலியில் அமிர்திருந்த சமயத்தில் அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கியால் சத்யஜித் சுடப்பட்டபோது, ஏதோ பட்டாசு வெடித்தபோல் தான் சத்தம்கேட்டது, ஆனால் இதில் நிலைகுலைந்த அவர் தரையில் விழுந்தார். அவரது அருகில் இருந்த நான் உடனடியாக அவருக்கு உதவிசெய்தேன் என்று அருகில் இருந்தவர் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் முகுல் ராய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என நாதியா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கெளரிசங்கர் தத்தா குற்றம்ச்சாட்டியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள, கொல்கத்தாவில் குற்றவியல் புலனாய்வு குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
போலீசாரின் தகவல்படி, பிஸ்வாஸ் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டுள்ளார். எனினும், அந்த நேரத்தில் எற்பட்ட பதட்டத்தால், குற்றவாளிகள் கூட்டத்தில் தப்பித்து சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகில் இருந்து போலீசார் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர். எனினும் அது கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கி என்பது உறுதிசெய்யப்படவில்லை.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த தலைவர்கள் பாஜகவினரை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், பாஜக தரப்பில் திரிணாமுல் காங்கிரஸின் உட்கட்சி கோஷ்டி மோதல் காரணமாக கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.