This Article is From Aug 23, 2019

முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது பாலின நீதிக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா நிறைவேறியது.

New Delhi:

முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முஸ்லிம் பெண்களிடம் அவர்களது கணவர்கள் தலாக் என்று அடுத்தடுத்து மூன்று முறை கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை செல்லாது என உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அதன் பிறகும் இந்த நடைமுறை தொடர்வதாகக் கருதிய மத்திய அரசு, இந்த நடைமுறையைத் தடுக்க கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது. அதன் பின் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மசோதாவில் பல்வேறு திருத்தங்களை முன்வைத்து எதிர்கட்சிகளில் வலியுறுத்தியது. எனினும் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே முத்தலாக் மசோதா 3 முறை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மீண்டும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

முதலில் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில், எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, முத்தலாக் மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது பாலின நீதிக்கு கிடைத்த வெற்றி. சமூகத்தில் பாலின சமநிலையை ஏற்படுத்த இந்த மசோதா உதவும் என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். 

இந்நிலையில், முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் தண்டனை வழங்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிரான 3 மனுக்களையும் விசாரித்த என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

(With inputs from PTI)
 

.