Jammu & Kashmir: கூடுதலாக 28,000 ராணுவ வீர ர்கள் ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
New Delhi: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பாதுகாப்பு படை வீரர்கள் 28,000 பேரை அனுப்பியுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, காஷ்மீரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதிகளவிலான ராணுவ படையினரை அனுப்புவது வழக்கம் தான் என்றும், தற்போதைய நிலையில் 38,000 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 10,000 துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக மேலும், 25 ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சாசனத்தின் 37-வது பிரிவு நீக்கப்படலாம் என்றும் அப்போது, பெரும் வன்முறை வெடிக்கலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு படைகள் அனுப்பபடுவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த வாரம் காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்தார். அவர் திரும்பிய பின்னரே துணை ராணுவ படையினர் குவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் கடந்த வாரம் கூறும்போது, வடக்கு காஷ்மீரில் ராணுவ படையினர் குறைவாக இருப்பதாகவும், அதனால்தான் கூடுதல் படைகள் தேவை என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதகமான வானிலை காரணமாகவே, தற்காலிகமாக யாத்திரையை நிறுத்துவதற்கு காரணம் என மத்திய அரசு தெரிவித்தாலும், வானிலை நிலைகளில் எந்த ஒரு பெரிய மாற்றங்களும் அந்த பகுதியில் தெரியவில்லை.
ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் தாக்குதல்களைத் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்ற காரணத்தால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.