சீக்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள், கமல்நாத்திற்கு எதிராக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஹைலைட்ஸ்
- தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளாக் கமல்நாத்
- 1984 சீக்கிய கலவர வழக்குதான் மீண்டும் தூசித் தட்டப்படுகிறது
- இந்த வழக்கில் சஜ்ஜன் குமார், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்
New Delhi: மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வரான கமல்நாத்திற்கு எதிரான 1984 சீக்கிய கலவர வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். சீக்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள், கமல்நாத்திற்கு எதிராக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
கமல்நாத், தனக்கும் சீக்கிய கலவர வழக்கிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த ஆண்டு ம.பி-யின் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது மீண்டும் பிரச்னை கிளம்பியது. அவரது பதவியேற்பு நிகழ்ச்சியும் சில சீக்கிய குழுக்கள் போராட்டத்துக்கு இடையேதான் நடந்தது.
அகஸ்டா வெஸ்ட்லேண்டு வழக்கில் கமல்நாத்தின் சொந்தக்காரரான ராதுல் புரி, சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம்தான், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கமல்நாத்தும், மத்திய அரசின் வளையத்துக்குள் வந்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா காந்தி, தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸைச் சேர்ந்த ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் மற்றும் கமல்நாத் ஆகியோர் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
டெல்லியின் ராக்கம்கஞ்ச் குருத்வாராவில் நடந்த கலவரத்தின்போது கமல்நாத் இருந்ததாகவும், அவரது முன்னிலையில் 2 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து கலவரத்தை விசாரித்த நானாவதி கமிஷன் இடத்திலும், கமல்நாத்திற்கு எதிராக சிலர் சாட்சியம் கொடுத்தனர்.
குருத்வாராவில் கலவரம் நடந்தபோது, தான் இருந்ததை ஒப்புக் கொண்ட கமல்நாத், ‘கலவரத்தைக் கட்டுப்படுத்தவே அங்கு சென்றேன்' என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சஜ்ஜன் குமார், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அதேபோல டெல்லி நீதிமன்றம், இந்த வழக்கில் 88 பேரை குற்றவாளி என்று சென்ற ஆண்டு தீர்ப்பளித்தது.