அணு ஆயுத தொழில்நுட்பங்களை, சீனா அதன் நீர்மூழ்கிக் கப்பல்களிலும், விமானங்களில் பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது
Washington: சீனாவுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்க அரசு குறைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து அணு ஆயுதம் தொடர்பாக ஏற்றுமதி செய்யப்படும் தொழில்நுட்பங்களை, சீனா அதன் நீர்மூழ்கிக் கப்பல்களிலும், விமானங்களில் பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரி ஒருவரை கைது செய்ய அமெரிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. அவர் அமெரிக்காவின் ஜென்ரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடமிருந்து சில தகவல்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், சீனா குறித்து அமெரிக்க எடுத்துள்ள நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசு தரப்பு, ‘அமெரிக்க - சீன அணு ஒப்பந்தத்துக்கு வெளியே, சீனா அணு ஆயுத தொழில்நுட்பங்கள் குறித்து தகவல் சேகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும்’ என்று தெரிவித்துள்ளது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகப் போர் நடந்து வரும் நிலையில், இந்த புதிய நடைமுறை சீனாவுக்கு அமெரிக்கா மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்க எனர்ஜி துறை விரிவாக கூறுகையில், ‘இதைப் போன்ற நடவடிக்கை இரு நாட்டுக்கும் இடையில் ஒரு சமநிலையை வைத்திருக்க முக்கியமானதாகும். அமெரிகாகவிடமிருந்து அதி நவீன அணு சக்தி தொழில்நுட்பங்களை வாங்கும் சீனா, அதை தெற்கு சீன கடலில் உள்ள அணு உலைகளில் பயன்படுத்துகின்றன, அதன் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களிலும் இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கையால் அமெரிக்க அணு சக்தித் துறை சிறிது பாதிக்கப்படும் என்பது உண்மை தான். ஆனால், இது குறுகிய காலத்துக்கானது தான். தொலைநோக்குப் பார்வையோடு பார்த்தால் அணு சக்தித் துறைக்கு இது நன்மை பயக்கும். தேச நலனுக்கும் இந்த முடிவு தான் சிறந்தது’ என்று கூறியுள்ளது.