This Article is From Sep 22, 2018

ஹெச்-4 விசா குறித்து அதிர்ச்சி முடிவெடுத்த அமெரிக்கா: 3 மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது!

ட்ரம்ப் அரசு, ஹெச்-1 பி விசாவின் விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருகிறது

ஹெச்-4 விசா குறித்து அதிர்ச்சி முடிவெடுத்த அமெரிக்கா: 3 மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது!

ஹெச்1-பி விசா வைத்திருக்கும் நபர்களின் குடும்த்தினருக்கு வழங்கப்படுவது தான் ஹெச்-4 விசா (கோப்புப் படம்)

Washington:

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஹெச்-4 விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு உரிமை 3 மாதத்துக்குள் நீக்கப்படும் என்று ஃபெடரல் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஹெச்-4 விசா மூலம் பயன்பெறுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் தான். அமெரிக்க அரசு எடுக்கும் இந்த முடிவு, அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

ஹெச்- 1பி விசா வைத்திருக்கும் அமெரிக்க வாழ் வெளிநாட்டவர்களின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் விசா தான் ஹெச்- 4. இதில் குடும்பத்தினர் 21 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்று ஐடி வேலை பார்த்து வரும் நபர்களின் மனைவிகள் தான் இந்த விசாவால் அதிகம் பயன் பெறுபவர்கள். எனவே அமெரிக்க அரசின் புதிய நடவடிக்கையால், இந்தியர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவர் எனப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசு தரப்பு நீதிமன்றத்தில், ‘ஹெச்-4 விசா மூலம் வேலை வாய்ப்பு பெறுவதை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்தான ஆணை இன்னும் 3 மாதத்தில் சமர்பிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் அரசு, ஹெச்-1 பி விசாவின் விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருகிறது. இந்த விசாவை பயன்படுத்தி பல நிறுவனங்கள் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதாக ட்ரம்ப் அரசு தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இதையடுத்து தான், ஹெச்-4 விசாவுக்கான புதிய நடைமுறையைப் பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது அமெரிக்க அரசு.

‘ஹெ-4 விசாவைப் பொறுத்தவரை, இதில் பயனடையும் 93 சதவிகிதத்தினர் இந்தியர்கள். 5 சதவிகிதத்தினர் சீனர்கள். மீதம் இருக்கும் 3 சதவிகிதம் தான் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்’ என்று தகவல் தெரிவித்துள்ளது யு.எஸ்.சி.ஐ.எஸ்.

.