கடந்த ஆண்டு சவுதிக்கு வந்த ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி
SOUTHAVEN, Mississippi: சர்வதேச அளவில் கச்சா எண்ணெயை ஓபெக் எனப்படும் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு அதிகளவில் செய்து வருகிறது. இதன் தலைவராக சவுதி அரேபியாதான் எப்போதும் இருக்கும் என்பது எழுதப்பட்ட விதி.
கச்சா எண்ணெயை இந்த ஓபெக் நாடுகள் உயர்த்தி வருவதால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுப்படைந்துள்ளார்.
கடந்த மாதம் ஐ.நா. சபையில் பேசிய அவர், ஓபெக் நாடுகள் மற்ற உலக நாடுகளை சிரமத்திற்கு தள்ளி வருகிறது. ஒன்றுமே இல்லாத நாடுகளை நாம் சில சமயம் சார்ந்து நிற்க வேண்டிய அவசியம் எழுகிறது.இதனை அந்த நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இது சரியல்ல. கச்சா எண்ணெய் விலை உயர்வு குறைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் ஓபெக் நாடுகளைத்தால் இவ்வாறு மறைமுகமாக தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் சவுதி அரேபியாவை தாக்கிப் பேசியுள்ளார் ட்ரம்ப். மிஸ்ஸிஸிப்பியில் பேசிய ட்ரம்ப், “ அமெரிக்காதான் சவுதி அரேபியாவை பாதுகாத்து வருகிறது. எனக்கு அந்நாட்டு அரசர் சல்மானை பிடிக்கும். அமெரிக்கா மட்டும் தனது படையை வாபஸ் பெற்று விட்டால் சவுதியால் 2 வாரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. அதனை எதிரி நாடுகள் கைப்பற்றி விடும்” என்றார்.