முன்னதாக ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை யாரும் எதிர்பாராத விதமாக அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் கொன்றது அந்நாட்டு ராணுவம்.
Washington DC: ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த பனிப் போர், நிஜப் போராக மாறிவிடுமோ என்று உலக நாடுகள் அஞ்சி வரும் நிலையில், ஈரான் நாட்டு ராணுவத் தளபதியைக் கொன்றதற்கான தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஈரான் தளபதியை ட்ரம்ப், “உலகின் நம்பர் 1 தீவிரவாதி,” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை யாரும் எதிர்பாராத விதமாக அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் கொன்றது அந்நாட்டு ராணுவம். அதைத் தொடர்ந்து ஈரான், ஈராக்கிலிருந்த அமெரிக்க ராணுவத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் நடந்த அதே நாளில், ஈரானிலிருந்து உக்ரைனுக்கு சென்று கொண்டிருந்த உக்ரைனின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 176 பேரும் மரணமடைந்தார்கள்.
உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. அதிபர் ட்ரம்ப் மட்டுமல்லாமல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடும், “உக்ரை விமான விபத்துக்கு ஈரான் காரணமாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது,” எனறார். இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் ஈரான், “உக்ரைன் விமானத்தைத் தவறுதலாக நாங்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டோம்,” என்று பகீர் கிளப்பும் விளக்கத்தைக் கொடுத்தது. இதனால் பிரச்னை பூதாகரமாகியுள்ளது.
இந்நிலையில் ட்ரம்ப், “சுலைமானி, உலகின் நம்பர் 1 தீவிரவாதியாக இருந்ததால் கொலை செய்தோம். அந்த நபர், பல அமெரிக்கர்களையும் பலரையும் கொன்றவர். அதனால் நாங்கள் அவரைக் கொன்றோம். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அது நம் நாட்டிற்கு அவமானமானது,” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார் ட்ரம்ப்.
ஈரான், பயணிகள் விமானத்தை அந்நாட்டு ராணுவம் ‘தவறுதலாக' சுட்டுவீழ்த்தியதில் 176 பேர் மரணமடைந்தனர். அந்த சம்பவத்திற்கு எதிராக இப்போது ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 3 நாட்களாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ட்ரம்ப், போராட்டக்காரர்களுக்கு எதாவது ஆனால் நிலைமை மோசமாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஈரான் தலைவர்களே, உங்கள் போராட்டக்காரர்களை கொன்றுவிடாதீர்கள். உலகமே உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக, அமெரிக்கா உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது,” என்று ட்விட்டர் மூலம் எச்சரித்துள்ளார் ட்ரம்ப்.
இது ஒரு புறமிருக்க, அதிபர் ட்ரம்ப், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறி, அவரைப் பதவிநீக்கம் செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. அது அங்குள்ள அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி அரசியல் பிரச்னை, ஈரான் பிரச்னை என அனைத்தையும் ட்ரம்ப் ஒரு சேர உன்னிப்பாக கவனித்து வருவதாக அவருக்கு நெருக்கமாக இருக்கும் நபர் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.