"சீனாவிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே உலக சுகாதார அமைப்புக்கு நல்லது."
ஹைலைட்ஸ்
- WHO-க்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார் டிரம்ப்
- முன்னதாக WHO-க்கு அளித்து வந்த நிதியையும் டிரம்ப் முடக்கினார்
- தற்போது நிரந்தர நிதி முடக்கம் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்
Washington: அடுத்த 30 நாட்களுக்குள் சரியான மாறுதல் போக்கு இல்லையென்றால், உலக சுகாதார அமைப்பான WHO-க்கு அமெரிக்கா அளித்து வரும் நிதி முழுவதும் நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது என்றும், சரியான முறையில் சிக்கலை கையாளவில்லை என்றும் குற்றம் சாட்டி, அமெரிக்க அரசு தரப்பு கடந்த ஏப்ரல் மாதல் WHO-க்கு அளித்து வந்த நிதியை முடக்கியது.
சில நாட்களுக்கு முன்னர் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர், டெட்ரோஸ் அதோனம் கெப்ரியஸஸுக்கு டிரம்ப், இந்த விவகாரம் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதையும் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடிதத்தில் டிரம்ப், ‘கொரோனா வைரஸ் குறித்து உலகிற்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க உலக சுகாதார அமைப்புத் தவறிவிட்டது. அதேபோல, சீனாவுக்கு நெருக்கமாக இருந்து செயல்பட்டது.
நீங்களும் உங்கள் அமைப்பும் சரியாக செயல்படாத காரணத்தினால் உலகமே பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. சீனாவிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே உலக சுகாதார அமைப்புக்கு நல்லது.
அடுத்த 30 நாட்களில் உங்கள் அமைப்பு சரியான மாறுதல்களைக் காட்டத் தவறினால், தற்காலிக நிதி முடக்கத்தை நிரந்தர நிதி முடக்கமாக மாற்ற பரிசீலனை செய்வேன். உங்கள் அமைப்பிலிருந்தும் நாங்கள் வெளியேறுவோம்,' என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தங்கள் தரப்பு எப்படி செயலாற்றியது என்பது குறித்து சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.
உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் நடத்திய கூட்டத்திலும், கொரோனா விவகாரத்தில் சில போதாமைகள் இருந்த்தது எனவும், அது குறித்து விசாரணையை வரவேற்பதாகவும் இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்தார்.