இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் சில பொருட்களுக்கு, அந்நாடு, வரி விதிக்காமல் இருந்த நடைமுறையைத் திரும்பப் பெற்றது.
ஹைலைட்ஸ்
- ட்விட்டர் மூலம் இந்தியாவை விமர்சித்துள்ளார் ட்ரம்ப்
- இந்தியப் பொருட்களுக்கு சமீபத்தில் வரி விதிப்பை அமல் செய்தது அமெரிக்கா
- இதற்கு பதிலடியாக, இந்தியாவும் 28 அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதித்தது
Washington: ஏற்கெனவே அமெரிக்கா - சீனா என்ற இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையில் வர்த்தகப் போர் நடந்து வரும் நிலையில், அடுத்த பிரச்னையைப் பற்றவைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்த முறை அவர் பாய்வது இந்தியா மீது.
அமெரிக்க அரசு சார்பில், முக்கிய அதிகாரிகள் அடுத்த வாரம் புது டெல்லிக்கு வர உள்ளனர். அவர்கள் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகம் குறித்து கலந்தாலோசிக்க உள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். இந்த இரு நாட்டு அதிகாரிகள் சந்திப்பைத் தொடர்ந்து, ஜப்பானில் ஜி-20 மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்து பேச உள்ளனர்.
ட்ரம்ப் தனது ட்வீட்டில், “அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா, வரி விதிப்புகளை தொடர்ந்து வருகிறது. இனியும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது” என்று மட்டும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் ட்ரம்ப், அமெரிக்கப் பொருட்களுக்கு இந்திய அரசு, விதித்து வரும் வரி விதிப்புகள் நீக்கப்பட வேண்டும் என்று கறாராக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் சில பொருட்களுக்கு, அந்நாடு, வரி விதிக்காமல் இருந்த நடைமுறையைத் திரும்பப் பெற்றது. இதையடுத்து இந்தியாவும் கடந்த மாதம், 28 அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிப்பை அமல் செய்தது. இதனால்தான் ட்ரம்ப் கொதிப்படைந்துள்ளார்.
மேலும் இந்திய அரசு, இணைய வர்த்தக நிறுவனங்களை முறைபடுத்தும் வகையில் பல சட்ட விதிகளை அமல் செய்ய உள்ளது. இதுவும் அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனாலும் அமெரிக்க அரசு தரப்பு, உஷ்ணத்தில் இருக்கிறதாம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் நடக்கும் வர்த்தகத்தின் மதிப்பு 2018 ஆம் ஆண்டு 142.1 பில்லியன் டாலர்களைத் தொட்டது. இதில் இந்தியாவின் பங்கு 24.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். இரு நாட்டுக்கும் இடையில் நல்ல உறவு இருந்தாலும், வர்த்தகத்தில் அது எதிரொலிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவின் வரி விதிப்பு முறையைப் பற்றி அதிபர் ட்ரம்ப், பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் அவர் இந்தியாவை விமர்சனம் செய்து கருத்துகள் தெரிவித்துள்ளார்.
(Reuters தகவல்களுடன் எழுதப்பட்டது)