This Article is From Jul 19, 2019

நீடிக்கும் அமளி: கர்நாடக சட்டமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பு!!

அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகரே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீடிக்கும் அமளி: கர்நாடக சட்டமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பு!!

நீங்கள் கண்டிப்பாக ஆட்சி அமைக்கலாம், அதற்கு அவரசம் இல்லை - குமாரசாமி

வாக்கெடுப்பின்போது கடும் அமளி நீடித்ததை தொடர்ந்து கர்நாடக சட்டசபையை திங்கட்கிழமை வரைக்கும் சபாநாயகர் ரமேஷ் குமார் ஒத்தி வைத்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என குமாரசாமிக்கு ஆளுநர் அடுத்த கெடு விதித்தார். ஆனால் மாலையும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதையடுத்து அவை திங்கட்கிழமை காலை 11 மணி வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஏற்கனவே ஆளுநர் விதித்த கெடுவை கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில், தற்போது இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என அடுத்த கெடுவை ஆளுநர் விதித்திருந்தார்.

எனினும், பேரவையில் இன்று நடந்த விவாதத்திற்குப் பிறகு அவையை மதிய உணவிற்காக சபாநாயகர் ஒத்திவைத்தார். அதனால், சபாநாயகரையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

இதனிடையே, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய குமாரசாமி, பாஜகவை கடுமையாக எச்சரித்தார். தனது 14 மாத அரசை கவிழ்க்கவே பாஜக அனைத்து சதி வேலைகளையும் செய்ததாக தெரிவித்தார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ரூ.40-50 கோடி வரை வழங்குவதாக பாஜக பேரம் செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டினார். இதனிடையே, பேசிய எடியூரப்பா, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

அதற்கு பதிலளித்த குமாரசாமி, '14 மாதம் ஆட்சியில் இருந்த நாங்கள் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டோம். சில விஷயங்களை விவாதிக்கலாம். நீங்கள் கண்டிப்பாக ஆட்சி அமைக்கலாம். அதற்கு அவரசம் இல்லை. அதனை நீங்கள் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையில் மேற்கொள்ளலாம். நான் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை' என்று அவர் கூறினார். 

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என நேற்று பாஜகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்ட நிலையில், நேற்று மாலைக்குள் நடத்துமாறு சபாநாயகரை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் ஆளுநரின் வேண்டுகோளுக்கு எதிராக பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முதலமைச்சரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜக எம்.எல்.ஏக்கள் இரவு முழுவதும் பேரவையிலேயே தங்கி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் பேரவையிலேயே உறங்கினர். 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 

ஆனால் அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும். எனவே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனிடையே, சுயேட்சை எம்எல்ஏக்கள் இரண்டு பேர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயரும். 
 

.