2016 ஆம் ஆண்டு பிரியதர்ஷினி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் தினேஷ் (கோப்புப் படம்)
Chennai: கோயம்பத்தூருக்கு அருகே, மூன்றாவது திருமணம் செய்துகொள்ள முயன்ற 26 வயது நபரை, முதல் 2 மனைவிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
எஸ்.அரவிந்த் என்றழைக்கப்படும் தினேஷ், தனியார் துறையில் வேலை செய்து வந்துள்ளார். அவர் 2016 ஆம் ஆண்டு பிரியதர்ஷினி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பிரியதர்ஷினியை சில நாட்களிலேயே சரியாக நடத்தாமல் பிரச்னை செய்துள்ளார் தினேஷ்.
இது குறித்து தினேஷின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார் பிரயதர்ஷினி. அவர்களும் அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தினேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, திருப்பூரில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் பிரியதர்ஷினி.
முதல் மனைவி சென்றுவிட்டதால், இரண்டாவது மனைவியை இணையதளத்தில் தேடியுள்ளார் தினேஷ். 2019 ஆம் ஆண்டு, முதல் திருமணம் நடந்ததை மறைத்து இரண்டாவதாக அனுப்பிரியா என்கிற பெண்ணை மணமுடித்துக் கொண்டார். அனுப்பிரியா விவகாரத்துப் பெற்று 2 வயது குழந்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணத்துக்குப் பின்னர் பிரியதர்ஷினியிடம் நடந்துகொண்டது போன்றே, அனுப்பிரியாவிடமும் செயல்பட்டுள்ளார் தினேஷ். அவர் கொடுத்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், கரூரில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் அனுப்பிரியா.
இதைத் தொடர்ந்து மூன்றாவது மனைவியை மீண்டும் இணையதளம் மூலம் தேட முற்பட்டுள்ளார் தினேஷ். இதை அறிந்த பிரியதர்ஷினி மற்றும் அனுப்பிரியா ஆகியோர், தினேஷ் பணி செய்யும் நிறுவனத்துக்குச் சென்றுள்ளனர்.
தினேஷை வெளியே அனுப்பி வைக்குமாறு இருவரும் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளனர். அவர்கள் அதற்கு செவி மடுக்காததைத் தொடர்ந்து, நுழைவாயிலுக்கு வெளியே அமர்ந்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர். இதனால் அந்த இடத்துக்கு காவலர்கள் வந்தனர். போலீஸ், தினேஷையும் இரண்டு மனைவிகளையும் காவல் நிலையத்துக்கு வருமாறு கூறினார்கள்.
ஆனால் தினேஷ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர் பிரயதர்ஷினியும் அனுப்பிரியாவும். பின்னர் காவல் நிலையத்தில் தங்களை ஏமாற்றியதற்காகவும், மூன்றாவது திருமணம் செய்ய முயன்றதற்காகவும் இருவரும் புகார் அளித்தனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)