This Article is From Oct 24, 2018

குற்றாலத்தில் தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள்… தமிழக அரசியலில் பரபர!

Disqualified AIADMK Legislators: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்றோ அல்லது ஒரு வாரத்திலோ தீர்ப்பு வரும் என்று யூகிக்கப்பட்டு வருகிறது

Disqualified AIADMK Legislators: தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தலைமையிலான அதிமுக பார்க்கிறது என தகவல்

Chennai:

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்றோ அல்லது ஒரு வாரத்திலோ தீர்ப்பு வரும் என்று யூகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூவத்தூர் பாணியில் திருநெல்வேலி, குற்றாலத்தில் தங்கியுள்ளனர் தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள். அமமுக-வினரின் இந்த நடவடிக்கையால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. 

அதிமுக-வில் சென்ற ஆண்டு, சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ் அணி பிரிந்தது. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்றது. சிறிது காலம் கழித்து ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. ஆனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில், 'முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று கூறினர்.

முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர் என்ற காரணத்தை முன் வைத்து, 18 எம்.எல்.ஏ-க்களையும் தன் அதிகாரத்தை வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்தார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில் இரு வேறு தீர்ப்புகள் வரவே, தற்போது மூன்றாவது நீதிபதியான சத்யநாரயணனன் வழக்கை விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், தீர்ப்பு சீக்கிரமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு வந்தால், தமிழக அரசு கவிழக் கூட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழக சட்டப்பேரவையில் 20 இடங்கள் காலியாக இருக்கிறது. பேரவையின் மொத்த எண்ணிக்கை 234. ஆனால் 20 இடம் காலியாக இருப்பதால், தற்போதைய எண்ணிக்கை 214. தற்போதைய எண்ணிக்கையில் பெரும்பான்மையை நிரூபிக்க 107 பேரின் ஆதரவு தேவை. அதிமுக-வுக்கு ஆதரவாக 116 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். 

அதே நேரத்தில், 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், பேரவையின் மொத்த எண்ணிக்கை 232 ஆக உயரும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 117 பேரின் ஆதரவு தேவை. அதிமுக-வுக்கு தற்போதைய நிலையில் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது.

இந்த காரணத்தினால் தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தலைமையிலான அதிமுக பார்க்கிறது. அதைத் தவிர்க்கவே தற்போது கூவத்தூர் பாணியில் குற்றாலத்தில் ரிசார்ட் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வான வெற்றிவேல், ‘எங்கள் ஆதரவு தகுதி நீக்கம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மகாபுஷ்கரத்தின் ஒரு பகுதியாக தாமிரபரணியில் முங்கி குளிக்க சென்றுள்ளனர். அதனால் தான் அங்கு அவர்கள் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார். 

ஆனால், தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்பதை பொறுத்து தான் தமிழக அரசியலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும். 

.