Stalin TTV Meet: முன்னதாக சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே டிடிவி தினகரனும் ஸ்டாலினும் எதேச்சையாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
Stalin TTV Meet: 2020 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது.
அப்போது தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேச ஆரம்பித்தார். உடனே குறுக்கிட்ட ஆளுநர், “ஒரு நிமிடம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்,” என்று சொன்னார். உடனே, அதிமுக எம்எல்ஏக்கள் மேசைகளைத் தட்டி சத்தம் எழுப்பினார்கள்.
தொடர்ந்து ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றியும், அதற்குத் தமிழக அரசு ஆதரவாக இருப்பது பற்றியும் விமர்சித்து உரையாற்றத் தொடங்கினார். ஸ்டாலினின் ஒலிப் பெருக்கி அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர் தொடர்ந்து உரையாற்றியபடியே இருந்தார். இதனால் எரிச்சலடைந்த ஆளுநர் புரோகித், “மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரே, நீங்கள் மிகச் சிறந்த பேச்சாளர் என்பது எனக்குத் தெரியும். நாட்டுக்கேத் தெரியும். அந்த திறமையை நீங்கள் இங்கே காட்டக் கூடாது. இந்த அவை விவாதங்களுக்கானது. விவாதம் செய்ய இந்த இடம் பயன்படுத்தப்பட வேண்டும். உரையாற்ற அல்ல,” என்றார். ஸ்டாலினுக்கு இப்படி ஆளுநர் ‘நோஸ் கட்' கொடுக்க, உஷ்ணமான திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
தொடர்ந்து ஸ்டாலின், “ஆளுநர் உரையால் நாட்டில் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை. அதிமுக அரசு எழுதி கொடுத்ததை அப்படியே உரையில் ஒப்பிக்கிறார் ஆளுநர்,” என்று குற்றம் சாட்டிவிட்டு நடையைக் கட்டினார். அவருடன் மற்ற திமுக எம்எல்ஏக்களும் வெளியே சென்றனர்.
தங்கள் வெளிநடப்புக்கான காரணம் பற்றி வெளியிலிருந்த செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, தற்போது ஆட்சியில் இருக்கும் அமைச்சரவை, இதே ஆளுநருக்கு தீர்மானம் போட்டு அனுப்பியது. அது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நாட்டினுடைய மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக. அதனால், அச்சட்டம் நிறைவேறி இன்று சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
உள்ளிட்ட காரணங்களை எல்லாம் கண்டிக்கக்கூடிய வகையிலேயே ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்,” என்றார்.
அவரைத் தொடர்ந்து டிடிவி தினகரனும், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். அவரும், “இன்று திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. அதை வலியுறுத்தியே நானும் வெளிநடப்பு செய்துள்ளேன். அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு பாதகமாக செயல்பட்டு வருகிறது,” என்று சாடினார்.
முன்னதாக சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே டிடிவி தினகரனும் ஸ்டாலினும் எதேச்சையாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இரு தரப்புத் நிர்வாகிகளும் செய்வதறியாமல் தவிக்க, இருவரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி கை குலுக்கிக் கொண்டனர்.